ஞாநிக்கு இரங்கல் கூட்டம்

 
 
சென்னை, ஜனவரி 18, 2018: பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக எழுத்தாளரான ஞாநிசங்கரன் மறைவுக்கு ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஞாநியின் மறைவுக்குப் பின் நடக்கும் முதல் இரங்கல் கூட்டம் இது என அவருடைய சகோதரி காயத்ரி வைத்யநாதன் கூறினார். இந்தக் கூட்டத்தில் ஞாநி சங்கரனின் சகோதரிகளான சுபத்ரா, காயத்ரி வைத்யநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
ஞாநியின் நண்பரான முனைவர் சர்வேசன் பேசும்போது குறிப்பிட்டதாவது, ''ஞாநியும் நானும் நிறைய வருடங்கள் சேர்ந்தே பணிபுரிந்திருக்கிறோம். நிறைய குறும்படங்களை குழந்தைகளுக்காக ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எடுத்துத் தந்திருக்கிறோம். ஞாநி எடுத்த இந்தப் படங்கள் பணத்திற்காக அவர் அல்ல என்பதும், குணத்திற்காக, நல்ல நோக்கத்திற்காக, நல்ல சிந்தனைக்காக அவர் பணிபுரிகிறார் என்பதை எனக்கு உணர்த்தியது. இதன் மூலம் பொதுமக்களுக்கு நல்ல  விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நம்பினோம். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஞாநி  எல்லோருடைய கருத்துக்களையும் கேட்பார். தன்னை விட வயதில் குறைந்தவர்களிடமிருந்து கூட நிறைய ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வார். ஞாநி ஒரு தர்க்கவாதி எந்த விஷயமானாலும் அவர்  எதிர்வாதம்  செய்வார் எனக் கூறுவார்கள். ஆனால் நல்ல விஷயங்களைக் கூறினால் எந்தவித மறுப்பும் சொல்லாமல் அவர் ஏற்றுக்கொள்வார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. எல்லா அரசியல் கட்டுரைகளிலும் அரசியல்வாதிகளை சாடிக்கொண்டே இருப்பார். தைரியமாக நேர்மையான முறையில் விமர்சனம் செய்வதில் அவருக்கு நிகர் அவரே! அவருடைய சிறுநீரகம் பழுதானதால் உடனே மாற்று அறுவை சிகிச்சை செய்ய அவர் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக சாதாரண பொதுமக்களில் சிறுநீரகம் வேண்டுவோர் பதிவிடும் அரசு ஏட்டில் பதிந்துவிட்டு, தனக்கான சிறுநீரகம் கிடைக்கும் வரை காத்திருந்தார்'' என்றார்.
 
ஞாநியின் மூத்த சகோதரி சுபத்ரா கூறியதாவது, '' ஞாநியின் இழப்பு என்பது தனிப்பட்ட முறையிலாகட்டும் அல்லது பொது வாழ்க்கையிலாகட்டும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எனக்கு சகோதரனாக மட்டுமல்லாது ஒரு நண்பனாகவே என்னுடன் இருந்தார். நேர்முகத் தேர்வு செல்வதாக இருந்தாலும், வேலை விஷயமாக இருந்தாலும் எனக்கு உதவியாக இருந்தவர். ஆனந்த விகடனில் எழுதிய 'ஓ பக்கங்கள்' மற்றும் 'மாலுவின் டைரி' அவர் பெயரை இன்றும் சொல்லிக்கொண்டிருக்கும். சாதாரணமான நிகழ்வுகளை அசாதாரணமாக யோசிப்பதுதான் சிறந்த கிரியேட்டிவிட்டி'' என்று அடிக்கடி என்னிடம் கூறுவார்.
 
ஞாநியின் இளைய சகோதரி காயத்ரி வைத்யநாதன் தன் இரங்கல் உரையில், ''மிகச் சிறு வயதிலேயே 'வம்பன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியவர் ஞாநி. பள்ளிப்பருவத்திலேயே நிறைய நாடகங்கள் எழுதினார். எங்கள் தந்தையார் 'இண்டியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டில் பணிபுரிந்ததால் அந்த ஜீனின் தொடர்ச்சிதான் அவர் பத்திரிகையாளனாக மாற்றியது. கொண்ட கொள்கையில் அவர் பிடிவாதமாக இருந்ததால் மாற்றுக் கட்சியினரைச் சேர்ந்தவர்கள் கூட இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்து அவருக்காக வந்தனர். அவருடைய இழப்பு பத்திரிகை உலகுக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கே பேரிழப்பு. ஞாநியின் மறைவுக்குப் பின் நடக்கும் முதல் இரங்கல் கூட்டம் இது! ஆகவே ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் நன்றி'' என்றார்.  
 
பேராசிரியர் சுவாமிநாதன் கூறும்போது, '' பத்திரிகையாளர் ஞாநி, மனைவி மீனா சுவாமிநாதன் மூலம்தான் முதலில் அறிந்து கொண்டேன். அவர் அளித்த குறும்படங்கள் மூலம் அவருடைய நோக்கம் புரிந்தது. அது தவிர அவருடைய சிந்தனை, ஒருமைப்பாடு மற்றும் அவருடைய உண்மை முகம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டேன். ஞாநியின் விமர்சனக் கருத்துகள் அதிகம் பெற்றிருப்பதாக'' கூறினார்.
 
இந்த இரங்கல் கூட்டத்திற்கு ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள், மூத்த விஞ்ஞானிகள், ஞாநியின் சகோதரிகள் உட்பட நிறைய ஆராய்ச்சி மாணவர்களும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் பேராசிரியர் சுவாமிநாதன் நன்றி கூறினார். 
Share