மதுரா சுவாமிநாதன் பெங்களூருவில் இந்திய புள்ளி விவர நிறுவனத்தில், பொருளாதார பகுப்பாய்வுப் பிரிவில் பேராசிரியர். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார். உணவுப் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி தொடர்பான ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துகிறார். இவர் இந்திய அரசாங்கத்தின் நீண்டகால உணவுப் பாதுகாப்பு உயர்மட்டக்குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் இவர் ஐக்கிய நாடுகளின் 2013-2015 ஆண்டுக்கான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிகள் யாவை?
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் (M.S.Swaminathan Research Organisation- ம.சா.சு.ஆ.நி.) மிக முக்கியமான ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆராய்ச்சிக் களங்களாக, கடலோர வள அமைப்புகள் பற்றிய ஆராய்ச்சி (Coastal Systems Research), விவசாயம் தொடர்புடைய பல்லுயிரிப் பெருக்கம் (Agricultural Bio Diversity), உயிரி தொழில்நுட்பம்(Bio-Technology), நீடித்த விவசாயம் (கால்நடை மற்றும் மீன் உற்பத்தி) சார்ந்த வாழ்வாதாரங்களின் பாதுகாப்பு (Sustainable Agricultural livelihoods), உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு (Food and Nutrition Security), போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. மேலும், பருவநிலை மாறுபாடுகள் (Climate change) மற்றும் பாலின சமத்துவமின்மையால் (Gender Inequality) ஏற்படும் சிக்கல்கள் குறித்து தனிப்பட்ட ஆராய்ச்சிகளும் மற்றும் மேற்கூறப்பட்ட ஆராய்ச்சிக்களங்களுடனும் தொடர்புபடுத்தி ஆராயப்படுகின்றன. இவ்வாராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள், விவசாய- சுற்றுச்சூழல்கள் (வறண்ட பகுதி, கடலோரப் பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் பல) மற்றும் குறிப்பிட்ட சமூகப் பொருளாதார நிலைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன. பழங்குடிப் பகுதிகள், கடலோர மீனவ சமூகங்கள் மற்றும் பல்லுயிர் செறிந்த வனப்பகுதிகளில் எங்களுடைய கள கிளை ஆராய்ச்சி நிலையங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் எங்களுக்குக் கிளை கள ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.
பருவநிலை மாற்றம் என்பது உங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? இது தமிழ்நாட்டை எவ்வாறு பாதிக்கும்? மேலும் வேறு மாநிலங்கள் இவ்வாராய்ச்சிகளால் எவ்வாறு பயன்பெறும்?
பருவநிலை மாற்றம் குறித்து ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. முதலாவதாக, பருவநிலை மாற்றத்திற்கு கிராமப்புறங்களில் அதை ஏற்றுக்கொள்ளும் தகவமைப்புத்திறன் அதிகரிக்கிறது. குறிப்பாக பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதை கடலோரம் வாழும் மீனவ சமுதாய மக்கள் ஏற்றுக்கொண்டதை மையமாகக் கொண்டது. இரண்டாவதாக, கிராமப்புற மக்களுக்குப் புரியும் வகையில் பயிற்சி பெற்ற குழுக்களை உருவாக்குதல். இவர்களைப் பசியைப் போக்கும் போராளிகள் (Community Hunger Fighters) என்றழைப்போம். கடலோர வள அமைப்புகள் பற்றிய ஆராய்ச்சிகள் 1989 ஆண்டு முதலே எங்கள் கவனத்தில் இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக பருவநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் கடல் நீர் மட்டம் என்பது நிதர்சனமான உண்மை. மேலும் இதனால் கடலோர நில விவசாய நிலங்களும் நன்னீர் அமைப்புக்களும் உப்பினால் பாதிக்கப்பட்டு உவர் நிலங்கள் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல், சமூகப் பொருளாதாரப் பாதிப்புகளை உருவாக்கி அதிலும் குறிப்பாக வாழ்வாதார இழப்பு, விவசாயத்தில் குறைந்த உற்பத்தி, மீன் வளங்களில் அளவு மற்றும் தன்மைகளில் மாறுபாடு ஆகியவையால் மக்கள் நகரங்களுக்கு குடிபெயரும் அவல நிலை ஆகியவை. தொடக்கம் முதலே ம.சா.சு.ஆ.நி மூன்று ஆராய்ச்சி உத்திகளை இப்பாதிப்புகளிலிருந்து மீள கையாண்டது. ஒன்று ஒரு ஒருங்கிணைந்த கடலோர மேலாண் திட்டத்தை வகுத்து அதை விளக்குதல், இரண்டாவதாக பாதிக்கப்பட்ட சதுப்பு நில காடுகளை (Mangrove forest) மீள் உருவாக்கம் செய்தல், மூன்றாவதாக உவர் தன்மையை தாங்கி வளரக்கூடிய பயிர்களை சதுப்பு நிலத் தாவரங்களின் மரபணுக்களை (Genes) கொண்டு உருவாக்குதல்.
பருவநிலை மற்றும் மழைபொழிவு, மீன் பிடி, நில உடைமை மற்றும் நில பயன்பாட்டு முறை மற்றும் மக்கள் உட்பட உள்ளூர் ஆதார அடிப்படையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் வகையில் இயற்கை வள மேலாண்மை எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட முடியும் என்பதை நிரூபிக்க நகர்ப்புற ஒருங்கிணைந்த கடலோர மண்டல மாதிரி மேலாண்மைத் திட்டம் (ICZMP- The model Integrated Coastal Zone Management Programme) நாகப்பட்டினத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய விளைவுகளில் ஒன்றான ICZM-க்கான இடை-பிரிவு திட்டத்திற்கான அறிவியல் அடிப்படையிலான முறையின் வளர்ச்சி ஆகும். இது இப்போது தகுந்த மாற்றங்களுடன் மாநில அளவிலான ICZM திட்டங்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப் பயன்படுகிறது.
நாடு முழுவதும் சதுப்பு நில பாதுகாப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதாக, தங்களுடைய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது எப்படி வெளிப்பட்டது?
சதுப்பு நிலகாடுகள், கடலோரப் பகுதிகளின் மீன் பிடி வளங்களை மேம்படுத்துவதோடு, கடல் நீர் மட்டம் உயருவதைத் தடுக்கும் ஒரு சக்தியாக செயல்படுவதால் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இவ்வாராய்ச்சிகளில் கவனம் செலுத்துகிறது. சதுப்பு நிலக் காடுகளின் தரை மட்டம் இத்தாவரங்களின் உதிர்ந்த இலைகள் மற்றும் ஆற்றில் அடித்து வரப்படும் வண்டல் ஆகியவற்றால் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. இவ்வுயர்வு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்நீர் உயர்விற்கு சமமானதாக ஆவதால் கடல் நீர் மட்ட உயர்வைத் தடுக்கும் காரணியாக அமைகிறது.
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சதுப்பு நில காடுகள் மேலாண்மை நிர்வாகத்தை (Joint Mangrove Management) முக்கிய சாதனையாகக் கருதுகிறது. இந்நிர்வாகம், அறிவியல் அடிப்படையிலான, சமூகத்தை மையமாகக் கொண்ட ஒரு செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் அணுகுமுறையாக பாழ்பட்ட சதுப்பு நிலக் காடுகளை மீளுருவாக்கம் செய்து அவற்றின் நீடித்த பாதுகாப்பை உறுதி செய்வதாகும். ம.சா.சு.ஆ.நி. (MSSRF) இத்திட்டத்தின் மாதிரியை நான்கு மாநிலங்களில் வனத்துறை மற்றும் உள்ளூர் மீனவ மற்றும் விவசாயிகளுடன் 1996 முதல் 2003 – வரை செயல்படுத்தியது. தற்பொழுது இம்மாதிரியானது எல்லா கடலோர மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதனால் இந்தியாவின் சதுப்பு நிலக்காடுகளின் பரப்பு 70,000 ஹெக்டேராக கடந்த 30 வருடங்களில் உயர்ந்துள்ளது. இவ்வாராய்ச்சிகள் மீள் உருவாக்கம் செய்யப்பட்ட 12 வயதுடைய ஒரு ஹெக்டேர் சதுப்பு நிலக்காடுகள் 500 கிலோவுக்கும் அதிகமான மீன் வளங்களை அளிக்கக்கூடியது என்று சுட்டிக்காட்டுகின்றன. எனவே சதுப்பு நிலக்காடுகளின் மீள் உருவாக்கம் நமது மீன் வளங்களை அதிகரிக்கச் செய்கிறது.
ம.சா.சு.ஆ.நி. (MSSRF) உப்புத்தன்மையைத் தாங்கி வளரும் நெல் வகைகளைச் சதுப்புநிலத்தாவரங்களின் மரபணுக்களைக் கொண்டு உருவாக்கியது. இந்நெல் வகைகள் 12 முதல் 15 கிராம் / லிட்டர் உவர்தன்மையைத் தாங்கி வளரும். இயற்கையில் காணப்படும் உவர் தன்மையைத் தாங்கி வளரும் பாரம்பரிய நெல் வகைகள் குறைந்த அளவே உவர்ப்பைத் தாங்கி வளரும்
தற்பொழுது ம.சா.சு.ஆ.நி. (MSSRF) கடலோர சமுதாயங்கள் கடல் மட்ட உயர்வுக்கு எதிராகத் தகவமைத்துக்கொள்ள மூன்று முக்கியமான உத்திகளை வகுத்துள்ளது. முதலாவதாக, ஒருங்கிணைந்த சதுப்பு நிலத் தாவரம், மீன் வளர்ப்பு மற்றும் விவசாயமுறைகளாக (Integrated Mangrove Fisheries Farming System) சதுப்பு நிலத் தாவர வளர்ப்பை மீன் வளர்ப்போடு ஒருங்கிணைத்து அது சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தில் வாழ்வாதாரத் தேவைகளை பாதுகாக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. ம.சா.சு.ஆ.நி.-யின் இம்மாதிரியானது உலகளவில் சிறந்த ”ப்ளூ சொல்யூஷன்ஸ்” (Blue Solutions) என்று ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ஒருங்கிணைந்த மீன் வளர்ப்புடன் பாரம்பரிய உவர் சகிப்புத்தன்மையுள்ள நெல் விவசாய முறைகளைப் புதுப்பிக்க முயல்கிறோம். இம்முறைகள் கர்நாடகாவில் கக்கா, கேரளாவில் பொக்காளி ஆகிய பாரம்பரிய நெல் வகைகளை மீன் வளர்ப்போடு இருந்த பழைய முறைகளை ஒருங்கிணைத்து புதுப்பிக்க முயல்கிறோம். மூன்றாவதாக ஹாலோபைட்ஸ்கள் (Halophytes) என்றழைக்கப்படும் உயர் உப்பு சகிப்புத்தன்மை உடைய தாவரங்களின் குழுவிலி ருந்து, நம் பயன்பாட்டிற்கான பயிர்கள் குறிப்பாக காய்கறி வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஊட்டச்சத்து நிறை விதைகள் போன்றவைகள் அடையாளம் காணப்படுகின்றன. ம.சா.சு.ஆ.நி. இவ்வகை ஹாலோபைட்ஸ்களின் (Halophytes) மரபியல் தோட்டத்தை உருவாக்கியுள்ளது.
ஆரம்பத்தில் பருவநிலை மாற்றத்தால் சூறாவளி, புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அபாயங்களை கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பணிபுரிந்தோம். தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக ஒருங்கிணைந்த மாதிரி கடலோர மேலாண்மைத் திட்டம் (ICZMP- The model Integrated Coastal Zone Management Programme), கூட்டு சதுப்பு நில மேலாண்மை (Joint Mangrove Management), ஒருங்கிணைந்த சதுப்பு நிலத் தாவரம், மீன் வளர்ப்பு மற்றும் விவசாயமுறைகளாக (Integrated Mangrove Fisheries Farming System) ஆகியவை செயல்படுத்தப்பட்டன. தற்போது இத்திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கும் அம்மாநில அரசுத்துறைகளுடன் இணைந்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இச்செயல்முறை மாதிரிகள் கடலோர சமுதாயங்களின் தகவமைப்புத்திறனை மேம்படுத்த உதவுகிறது. ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றத்திற்கான கூட்டாய்வுக் கட்டமைப்பு (UNFCCC- The United Nations Framaework Convention on Climate Change) மக்களின் தகவமைப்பு திறன் மேம்பாட்டிற்கான நிதியில் இருந்து (Adoptation Fund) இத்திட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகளின் துணையோடு செயல்முறை விளக்கங்களை ஆந்திர மாநிலத்தில் செய்ய பொருளுதவி செய்துள்ளது. கேரள மாநிலத்தில், விவசாய பாரம்பரியமான பகுதியாக அறியப்பட்ட குட்டநாட்டின் கடல் மட்டத்திற்குக் கீழே தலைமுறை தலைமுறையாகச் செய்யப்படும் விவசாயப் பணிகளை செம்மைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறோம்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ம.சா.சு.ஆ.நி-ல் எந்தளவுக்கு முக்கியமானது?
ம.சா.சு.ஆ.நி-யை இந்திய அரசாங்கம் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் என அங்கீகரித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எங்கள் நிறுவனத்தின் மையக்கருத்தாகும். ம.சா.சு.ஆ.நி-யின் ஆராய்ச்சிகள் உயிரித் தொழில் நுட்பத்தின் உதவியுடன் (Bio- Technolgy – முதன் முதலில் உப்பு – சகிப்புத்தன்மை கொண்ட நெல் வகையை உருவாக்கியது) தொடங்கி உயிரினப்பன்மை பாதுகாப்பு ஆராய்சிகள் (வயநாட்டில் காட்டில் விளையும் உணவுத் தாவரங்கள் பாதுகாப்பு) மற்றும் மக்களின் பங்களிப்புடன் (Participatory) விவசாய உற்பத்தி, ஊட்டச்சத்தைப் பெருக்கக்கூடிய முறைகள், நேர்த்தியான விதைகள் மற்றும் பண்ணைய செயல்முறை விளக்கங்கள் ஆகியவை ஆகும்.
ம.சா.சு.ஆ.நி-யில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினை சமுதாயத்தின் நீடித்த மற்றும் சமமான வளர்ச்சிக்கென இணைப்பதை தன் தொலைநோக்குப் பார்வையாக கருதி, அதற்கென ஏழை மக்கள் மற்றும் மகளிர் முன்னேற்றம் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு என்ற நெறியில் பணியாற்றுகிறது. ம.சா.சு.ஆ.நி-யின் ஆராய்ச்சிகள் மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெண்கள், விவசாயிகள், பழங்குடி சமூகங்கள் மற்றும் பலர் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இம்மக்கள் குறிப்பாக, ஆராய்ச்சிக்குரிய, அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகள், அவற்றிற்கான தீர்வுகள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான பங்களிப்புடன், திட்டங்களை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் அவற்றை மேற்பார்வை செய்வதிலும் பங்கெடுக்கிறார்கள். இவ்வாறாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களினால்தான் ம.சா.சு.ஆ.நி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே கடல் மட்ட உயர்வுக்கான தீர்வை நோக்கிய முன்கூட்டியே திட்டமிட்ட (Anticipatory) ஆராய்ச்சிகளை செயல்படுத்தியது. எங்களின் திட்டங்கள் குறிப்பாக முதன்மைக் கள ஆய்வுகளாகவும் இவற்றிலிருந்து பெறப்படும் தரவுகள் தீர்வை நோக்கிய மாதிரிகளை உருவாக்கி அவற்றை பயன் தரும் செயல்முறைகளாக மாற்ற உதவுகின்றன.
எங்கள் ஆராய்ச்சிக் குழுவினர் பொதுவாக உயிரியல் மற்றும் சமூக அறிவியலாளர்களாக உள்ளனர். ஏனெனில் களப் பணியின் போது இந்த இரு துறையும் மிக முக்கியவத்துவம் வாய்ந்தது. மிகவும் அவசியமானதும் கூட. ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தத்துவம் யாதெனில், நாம் அறிவியலால் ஏற்படும் அனைத்து புதிய முன்னேற்றங்களையும் திறந்த மனத்துடன் ஏற்று மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.
தங்கள் பார்வையில் ம.சா.சு.ஆ.நி-யின் பணியிலுள்ள முக்கியமான சவால்கள் யாவை? அவற்றிற்கு எவ்வாறு தீர்வு காண விழைகிறீர்கள்?
விவசாயம் மற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு பொதுவான சவாலாக இருப்பது, உற்பத்தித்திறன், லாபத்தன்மை மற்றும் சூழலியல் பாதுகாப்பு ஆகியவை ஆகும். முக்கியமாக நாம் சூழலியலுக்கு கேடு விளைவிக்காமல், நிலைத்த மற்றும் நீடித்த விவசாயத்தில் உற்பத்தித் திறனை உயர்த்தவும், வருமானத்தைப் பெருக்கவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, விவசாயத்தைச் சார்ந்த பெருவாரியான மக்கள் வறுமையில் வாடுவது மிகப்பெரிய சவாலாகும். இதனுடன் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் கேடுகளும் இந்தச் சவாலை மேலும் சிக்கலாக்குகின்றன. நாங்கள் வறண்ட மலைப்பாங்கான, கடலோர மற்றும் பல்லுயிர் வனப்பகுதிகளில் உள்ள பாதிப்படைந்த விவசாயிகளுடன் பணியாற்றுவதால் இந்தச் சிக்கலை மிகவும் உணர்ந்திருக்கிறோம்
இதற்கு எடுத்துக்காட்டாக, நாட்டில் பருப்பு வகைகளின் உற்பத்திப்பெருக்கம் (production), மற்றும் மகசூல் அதிகரிப்பு (productivity) ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. தற்போது நாம் உள்நாட்டுத் தேவைக்காக கணிசமான அளவை இறக்குமதி செய்கிறோம். ம.சா.சு.ஆ.நி. குறிப்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் (Farmer Producer Company) இணைந்து பயறு வகைகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய வகைகளின் உற்பத்திப் பெருக்கத்தை உறுதி செய்ய தேவையான பண்ணைய முறைகளை செயல்படுத்துகிறது. மேலும், விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பொருத்தமான, காலநிலைக்குத் தகுந்த பயிர் மற்றும் பயிர் அல்லாத தாவரங்களையும், வேளாண் தொழில்நுட்பங்களையும் வழங்கி விவசாயிகளின் வருமானத்தையும் சத்தான உணவு வகைகளின் உற்பத்தியையும் பெருக்க வகை செய்கிறோம்.
இந்த ஆராய்ச்சிகளில் உயிரியல் மற்றும் சமூக விஞ்ஞானிகள் ஒன்றாகப் பணிபுரிகின்றனர்.
கட்டுப்பாடற்ற முறையில், மீன் வளங்களை தேவைக்கு அதிகமாகப் பிடித்து அழித்தல் ஆகியவை, கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மற்றொரு முக்கிய பிரச்சனை. எங்களது ‘அனைவருக்கும் மீன்’ (Fish for All Centre) ஆராய்ச்சி மையத்தின் மூலம் நிலைத்த நீடித்த மீன் பிடி நடவடிக்கைகளை ஊக்குவித்தல், பவளப்பாறைகள் போல் செயற்கைப் பாறைகளை ஏற்படுத்தி மீன் உற்பத்தியைப் பெருக்குதல், மீனவ சமுதாய பெண் மற்றும் ஆண்களுக்கு மீன் மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பதற்கான பயிற்சி அளித்தல் ஆகியவற்றால் மேற்கூறப்பட்ட, பாதிப்புக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எங்கள் தொழில்நுட்பப் பயன்பாடுகளில் ஒன்றான ‘மீனவ நண்பன் செயலி’ (Fisher Friend Mobile App) என்ற கைபேசி செயலி கடல் அலையின் உயரம், காற்றின் திசை வேகம், மீன்கள் அதிகம் கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ள இடங்களை மிகத் துல்லியமாக மீனவர்களுக்கு கடந்த பத்து வருடங்களாக அளித்துவருகிறது.
மேலும், உயிரினப் பன்மையைப் பாதுகாக்க, கேரளாவில் உள்ள வயநாடு என்ற இடத்தில் ‘சமுதாய விவசாய உயிரினப் பன்மை நிலையம்’ (community agro bio- diversity centre) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடம் உயிரினப் பன்மம் நிறைந்த ஆனால் பாதுக்காக்கப்பட வேண்டிய பகுதியாகும். (hot spot) மற்றும் பழங்குடி இனத்தவர் அதிகம் வாழும் பகுதியாகவும் விளங்குகிறது. ம.சா.சு.ஆ.நி இவ்விடத்தில் உயிரினப்பன்மையை பாதுகாப்பதுடன் இவற்றைப் பயன்படுத்தி வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. எங்கள் நிறுவனம் தாவரங்களை அவற்றின் வாழிடங்களிலும் (in-situ), வெளியிடங்களிலும் (ex-situ) மற்றும் வேளாண் தோட்டங்களில் பழங்குடி மக்களோடு சேர்ந்து பேணுவதில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
நீடித்த நிலையான நிலை வளர்ச்சிக்கு உள்ளூர்- நிலைத் திட்டமிடல் தேவைப்படுகிறது. உள்ளூர் நிலையில் உள்ள பஞ்சாயத்ராஜ் உறுப்பினர்களுக்கு உரிய விஞ்ஞான அறிவையும் தொழில்நுட்பத்தையும் கொடுத்து அதிகாரம் அளிப்பதன் மூலம் அவர்களின் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டுத்திறன் ஆகியவை மேம்படுகிறது என்பதை எங்கள் அனுபவம் காட்டுகிறது.
மேற்கூறப்பட்ட சவால்களைச் சமாளிப்பதற்கு, சமூக சிந்தனையுள்ள அறிவார்ந்த ஆர்வமுள்ள இளைஞர்களை ஈர்ப்பதும் ம.சா.சு.ஆ.நி-க்கும் ஒரு சவால் ஆகும்.