பத்திரிகை செய்தி
பாக் நீரிணை பகுதியில் பூ இறால் மேலாண்மை மற்றும் இறால் இழுவையில் சதுரக் கண்ணி தூர்மடிகளை பயன்படுத்துவது குறித்த பங்குதாரர்களின் ஆலோசனை கூட்டம்
இறால் இழுவலைகளில் சதுரகண்ணி தூர்மடிகளை பயன்படுத்தப்படுவதால், குஞ்சு மீன்கள் மற்றும் கழிவு மீன்கள் பிடிபடுவதை கணிசமான அளவு குறைத்து, மீன்பிடி நடவடிக்கைகளின் நிலைத்தன்மையை மேம்படுத்த முடியும் என்று ம.சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீன்பிடி தொழில்நுட்ப நிறுவனம், மீன்வளத் துறை மற்றும் மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகங்களில் உள்ள மீனவர் சங்கங்களுடன் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இறால் மீன்பிடியில் சதுர கண்ணி தூர் முனையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இறால் இழுவையில் சதுரகண்ணி தூர்மடிகளின் பயன்பாடு குறித்த பங்குதாரர்களின் ஆலோசனை கூட்டத்தினை ம .சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நேற்று 21.10.2022 ராமேஸ்வரம் தீவு, தங்கச்சிமடம் கிராம வள மையத்தில் நடத்தியது.
முனைவர் திரு ஜி.என். ஹரிஹரன், நிர்வாக இயக்குனர், ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், நிகழ்ச்சிக்கு தலைமையேற்று இறால் இழுவலையில் சதுர கண்ணி தூர்மடியினை தன்னார்வத்துடன் பயன்படுத்த முன்வந்த 75 முதன்மை மீனவர்களுக்கு பூ இறால் இழுவைக்கு ஏற்ற 25 மிமீ சதுர கண்ணி தூர் மடியினை வழங்கி “பாக் நீரிணையில் பூ இறால் வளத்தின் மேலாண்மை” குறித்த மீனவர்களுக்கான தன்னார்வப் பயிற்சி கையேட்டையும் வெளியிட்டார். இந்த கையேடு பாக் நீரிணை பூ இறால் மேலாண்மை மற்றும் பூ இறால்களின் நிலையான அறுவடை குறித்து மீனவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக நிறுவனத்தினால் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் விவரிக்கப்பட்டுள்ள மீன்பிடி நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், ஆரோக்கியமான இறால் இருப்பு மற்றும் நிலையான மீன்பிடி நடைமுறைகளுக்கு மீனவர்கள் பங்களிக்கின்றனர். மீன்வள மேலாண்மையில் மீனவ மக்களுடைய பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் அத்தகைய பங்கேற்பு பிராந்தியத்தில் உள்ள மீன்வளங்களின் நிலையான மேலாண்மைக்கு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார். மேலும் சதுர கண்ணி தூர்மடியினை பெற்றுக்கொண்ட மீனவர்கள் அவற்றை பயன்படுத்தி மீனவர்களிடம் இருந்து கிடைக்கும் தரவுகள் அடுத்தகட்ட மீன்வள ஆராய்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்றும், எனவே மீனவர்கள் அத்தகைய மீன்பிடி தரவுகளை ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பாக் நீரிணை மேம்பாட்டு திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் முனைவர் சி வேல்விழி அவர்கள் ம.சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் பாக் நீரிணையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளின் தரவுகளை முன்வைத்தார். இறால் இழுவலையில் மீனவர்களுடன் இணைந்து கடந்த இரண்டு வருடமாக பரிசோதிக்கப்பட்ட மூன்று விதமான குஞ்சு மீன் மற்றும் கழிவுமீன் தவிர்ப்பு சாதனங்களில் 25 மிமீ (12.5 மிமீ பார் நீளம்) கண்ணி அளவு கொண்ட சதுர கண்ணி தூர்மடிகள் நல்ல முடிவுகளை கொடுத்துள்ளது , பூ இறாலில் பிடிப்புக்கு மீனவர்கள் பயன்படுத்தும் டைமண்ட் தூர் மடியை ஒப்பிடும் போது, சதுரக்கண்ணி தூர்மடிகள் குஞ்சுமீன்களின் அளவு மற்றும் வணிக ரீதியாக முக்கியத்துவம் இல்லாத மீன்களின் பிடிப்பைக் குறைப்பதற்கும் அதே சமயம் விற்பனைக்கு கிடைக்க கூடிய மீன்களின் அளவுகளிலும் அதிக மாற்றமில்லாமல், டீசல் அளவு மற்றும் மீன்பிடிகளை பிரிக்கும் நேரமும் வெகுவாக குறைந்ததாக எடுத்துரைத்தார். சராசரியாக ஒரு மணி நேர இறால் இழுவையில் சதுர கண்ணி வலைகளை பயன்படுத்தும்போது 3 முதல் 5 கிலோ வரை குஞ்சுமீன்கள் மற்றும் வணிக ரீதியாக முக்கியத்துவம் இல்லாத மீன்களின் குறைப்பு உறுதிசெய்யப்படுகிறது. எனவே மீனவர்கள் தங்கள் இறால் தூர் மடியில் சதுக்கண்ணி தூர்மடியினை பயன்படுத்த முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
மண்டபம் மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி பொறுப்பாளர் டாக்டர் தமிழ்மணி, இராமநாதபுரம் மீன்வளத் துறை துணை இயக்குனர் டாக்டர் காத்தவராயன் ஆகியோர், ராமேஸ்வரம் பகுதியில் கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் நிலையான மீன்வளத்தின் முக்கியத்துவம் குறித்தும், சதுரக் கண்ணி தூர்மாடியினை பயன்படுத்துவதின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.
மீனவர் சங்கத் தலைவர்கள் திரு என்.ஜே.போஸ், திரு. ஜஹீர் உசேன், திரு.பாலசுப்ரமணியம், திரு. சுல்தான் உள்ளிட்ட மண்டபம் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, விசைப்படகுகளில் சதுரக் கண்ணி தூர்மடிகளை செயல்படுத்துவது குறித்த ஆய்வுத் திட்டத்தின் தங்களுடைய அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்டதுடன் இறால் வலையில் சதுரக்கண்ணி வலைகளை பொருத்துவதற்கு தங்களுடைய ஆதரவையும் வெளிப்படுத்தினர்
இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். இறால் இழுவலையில் சதுர கண்ணி தூர்மடியினை பெற்றுக்கொண்ட மீனவர்கள் தங்களின் முழுஒத்துழைப்பையும் வழங்கி மீன் வள பாதுகாப்பில் மீனவர்களுடைய பங்களிப்பிணை உறுதிசெய்தனர் .
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தங்கச்சிமடம் ம.ச சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியாளர்கள் ஒருங்கிணைத்தனர் முன்னதாக ம.ச சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியாளர்கள் திரு தமிழழகன் வரவேற்றார். திரு கெவிகுமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.