வீட்டுக்குள் ஒரு காடு! மாடித்தோட்டத்தின் மகிமை… மனம் திறக்கிறார் ஜஸ்வந்த்சிங்!
மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் என்ற புதிய நடைமுறை சென்னையைத் தாண்டி தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. சென்னை புறநகரில் குடியிருக்கவே இடம் இல்லை அதில் தோட்டம் எவ்வாறு போடுவது என நினைக்கிறீர்களா… அப்படியே சென்னை முகப்பேருக்கு வாருங்கள். அங்கு வசிக்கும் ஜஸ்வந்த்சிங் ஏறக்குறைய 6,500 ச.அடிக்கு வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மாடியிலும் தோட்டம் அமைத்திருக்கிறார். அவரை நாம் சந்தித்தோம்….
ஜஸ்வந்த் சிங் வீட்டுக்குள் நுழையும் போதே ஏதோ காட்டுக்குள் நுழைந்துவிட்ட ஓர் எண்ணம் ஏற்படுகிறது. அவ்வளவு மரங்கள், செடி கொடிகள், பொன்சாய், மருத்துவ மூலிகைகள், பழங்கள், குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகள் என பச்சைப் பசேலென்று மனதைக் கொள்ளை அடிக்கிறது. அவற்றைப் பட்டியலிட்டிருக்கிறோம்.
தன் வீட்டைச் சுற்றியும், மாடியிலும் பல்வேறு விதமான மரங்கள், குறிப்பாக சந்தன மரங்கள் மட்டும் 200, தவிர சிவப்பு சந்தனமரங்கள் 150, மூலிகை மரச் செடிகள் குறிப்பாக சீனித்துளசி (நீரிழிவு நோயாளிகளுக்கு) இதில் நான்கு அல்லது ஐந்து இலைகளைப் போட்டாலே போதும், சர்க்கரைக்கான ருசி கிடைத்துவிடும். இந்தச் செடி சத்தியமங்கலம் காட்டில் இருந்து பெற்றாராம். மிகவும் அரியவகை மூலிகைச் செடிகளை ஆர்வத்தோடு தேர்ந்தெடுத்துப் பயிரிட்டு வருகிறார். சிவப்பு கற்றாழையில் ஜெல் ரத்தச் சிகப்பில் இருக்கிறது. கற்பூரம், பலா, இங்க் மரம் என பல்வேறு வகைப்பட்ட மரங்களும் செடிகளும் வீட்டின் தரைத்தளத்தில் நம்மை வரவேற்கின்றன.
மாடிப்பகுதியில் அன்னாசி, ஆரஞ்சு (4 வகை), சப்போட்டா, மா, முருங்கை, வாழை, சிறு நெல்லி, பெருநெல்லி, பேரிக்காய், பேரிச்சம்பழம், எலுமிச்சை, மிக்கி மவுஸ் (கார்ட்டூன் பாத்திரம் போலவே பழம்), கிர்ணி, பப்ளிமாஸ், இஸ்ரேல் ஆரஞ்சு, மாதுளை, சீத்தாபழம், கொய்யா, பப்பாளி, மற்றும் காய்கறிகளில் கத்தரி, வெண்டை, மிளகாய்(5வகை), தக்காளி (4வகை), சுரைக்காய், பீர்க்கை, பாகற்காய், சுண்டக்காய், பொதினா, கறிவேப்பிலை, பீன்ஸ், கள்ளிச்செடி, நேத்ரா பூண்டு, தாமரை, செங்காந்தள் மலர், திப்பிலி, வெற்றிலை, கொடுக்காப்புளி என மொத்தம் ஆயிரம் ரகங்களுக்கு மேற்பட்டு வளர்த்து வருகிறார். வாசலில் நம்மை வரவேற்கும் மரத்தின் பலகையில் ‘ஒரே ஒரு மரம், பத்து நபர்களுக்கு நல்ல காற்றைத் தருகிறது’ என்று கூறுகிறது. எல்லா செடிகளையும் பிளாஸ்டிக் வாளிகளில் வைத்து வளர்க்கிறார். ஒவ்வொரு செடியின் வாளியிலும் பெயர், தாவர வகையின் பெயர், இனம் என தமிழிலும், ஆங்கிலத்திலும் பெரிய எழுத்துக்களில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றன.
அனைத்துச் செடிகளும் மரங்களும், பழவகைகளும் பிளாஸ்டிக் வாளிகளில் வளர்க்கப்படுகின்றன. எல்லா வாளிகளிலும் மண்ணுக்குப் பதிலாக தென்னை நார்க்கழிவுகளைத்தான் போட்டிருக்கிறார். சொட்டு நீர் பாசனத்தின் மூலம் செடிகளுக்குத் தண்ணீர் விடுகிறார். எல்லா வாளிகளின் மேற்புரத்தில் பிளாஸ்டிக் குழாய்கள் இணைக்கப்பட்டு ஒவ்வொரு வாளிக்கும் சொட்டு சொட்டாக நீர் விழும்படி செய்துள்ளார். இதனால் தண்ணீர் வீணாகாமல் சேமிக்கப்பட்டு முழுவதுமே அனைத்துச் செடிகளுக்கும் நீர் கிடைக்கும்படி செய்திருக்கிறார். தரைத்தளத்தில் பயிரிடப்பட்டிருக்கும் செடிகளுக்கும் 20 அடி உயரமுள்ள குழாயை நிற்க வைத்து அதன் மேல் தண்ணீர் சுழட்டியபடி எல்லா செடிகளுக்கும் நீர் விழும்படி செய்திருக்கிறார். இந்த நிகழ்வைப் பார்க்கும்போது ஏதோ பிரத்யேகமாக இந்தச் செடிகளுக்கு மட்டும் மழை விழுவது போல ஜஸ்வந்த்சிங் அமைத்திருக்கிறார். தோட்டம் அமைத்திருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் சோலார் பேனல் வைத்து சூரிய மின்சாரம் தயாரித்து அவை பேட்டரிகளில் சேமிக்கப்பட்டு இரவு நேரங்களில் அவை விளக்குகளாக ஒளி விடுகின்றன.
நிறைய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஜஸ்வந்த்சிங்கின் வீட்டைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அண்ணா பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் ஒவ்வொரு வருடமும் வந்து செடியின் தாவரப் பெயரினையும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயரையும் படித்து அறிந்து கொள்கின்றனர். இதுவரை பத்தாயிரம் மாணவர்களுக்கும் மேல் இவர் வீட்டை பார்த்துள்ளனர். வீட்டின் ஒரு சுவரில் இந்திய வரை படத்திலேயே ஒரு செடியை வடிவமைத்து வளர்த்திருக்கிறார்.
இயற்கை உரம்
அனைத்து வகைச் செடிகளும் மரங்களுக்கும் இயற்கை முறை விவசாயத்தையே செய்துவருகிறார். நோய் மற்றும் பூச்சிகளால் செடிகள் தாக்கப்படுவதற்கு ஆங்காங்கே எண்ணெய் தடவிய தாள்களும், பூச்சிகளைக் கவர்ந்திழுக்கக்கூடிய திரவங்களைப் பாட்டில்களில் ஊற்றி அதைச் செடிகளுக்கு மேல் தொங்கவிட்டு நிறைய பொரிகளையும் வைத்திருக்கிறார்.
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கியப் பரிந்துரையான பஞ்சகவ்யாவை இவரே தயாரிக்கிறார். இயற்கை முறையில் பஞ்சகவ்யா தயார் செய்ய பஞ்சகவ்யா தொட்டியும் வீட்டின் பின்புறத்தில் செய்து வைத்திருக்கிறார். வேப்பிலை, வேப்பங்கொட்டை, ஆடாதொடை, நொச்சி, துளசி, தும்பை இலை ஆகியவற்றை அரைத்து அதில் ஆடு, மாடுகளின் கோமியத்தில் ஊறவைத்து பஞ்சகவ்யா தயார் செய்து செடிகளுக்குத் தெளித்து பூச்சிகளில் இருந்து தாவரங்களைக் காக்கிறார். மற்றொரு புறத்தில் மண்புழு உரம் தயார் செய்கிறார். இதற்கான தொட்டியும் அருகில் இருக்கிறது. இவையிரண்டுக்கும் அருகில் பயோ-கேஸ் தொட்டியும் வைத்து, அதிலிருந்து வரும் எரிவாயுவைக் கொண்டு தினமும் பதினைந்து நிமிடங்கள் பயன்படுத்திக் கொள்கிறார்.
தேனீ வளர்ப்பு
வீட்டின் மேல் மாடியில் இரண்டு வகையான தேன் கூடுகளை அமைத்து அதில் ஒன்று ஆஸ்திரேலியன் தேனீ. மற்றொன்று சாதாரணத் தேனீ, வீட்டின் கீழ்த்தளத்தில் இரண்டு பெட்டிகளில் தேனீக்களை வளர்க்கிறார். நான்கு தேனடைகளில் இருந்தும் தேனை எடுத்துக்கொள்கிறார். இவர் வளர்க்கும் தேனீக்களும் இவருடைய தோட்டத்திலுள்ள மலர்களிடமிருந்தும், வெளியிடங்களுக்குச் சென்றும் தேனைச் சேகரிக்கின்றன. இதனால் அயல் மகரந்தச் சேர்க்கைக்கும் இவை உதவி புரிகின்றன.
மர வீடு
ஜஸ்வந்த்சிங் வீட்டில் நம்மை ஆச்சரியப்படுத்திய மற்றொரு விஷயம் மரவீடு. வீட்டின் பின்புறத்தில் மாமரம் ஒன்றை வளர்த்திருக்கிறார், அதில் மரத்தின் பாதியில் இருந்து அரை டன் இரும்பு சட்டங்களைக் கொண்டு குடில் போன்ற வீட்டை அமைத்திருக்கிறார். அதில் ஏறுவதற்கு வீட்டின் மேல் மாடியில் இருந்து படிகள் அமைத்திருக்கிறார். அதில் ஏறி நிற்கும்போது, ஏதோ அந்தரத்தில் ஊசலாடுவது போலவும் காற்றுக்கு மரம் ஆடும்போது கூடவே சேர்ந்து நாமும் ஆடும் அந்த அனுபவம் மறக்கமுடியாதது. முன்னாள் தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தா முதல் நிறைய உயர் அதிகாரிகள் வரை அதில் தங்கி உணவருந்திச் சென்றிருக்கின்றனர். அந்த ஒரு மரவீடு 25 நபர்களைத் தாங்கக் கூடியது.
ஜஸ்வந்த்சிங்கின் பூர்வீகம் பஞ்சாப் மாநிலத்தில் ஹோஷியார்பூர், 1978-லிருந்து இந்த வீட்டில் வசித்து வருகிறார். படித்தது கட்டடப் பொறியாளர். கட்டுமானத் தொழில் தான் பரம்பரைத் தொழில். 55 வயதான ஜஸ்வந்த்சிங் 20 வயதில் தாத்தாவின் மூலம் தோட்டச்செடிகளைப் பயிரிட்டு வளர்த்திருக்கிறார். முதலில் பொழுது போக்காகச் செய்யப்போய் பின் அதில் ஆர்வம் ஏற்பட்டு இவ்வளவு பெரிய வீட்டுக்குள் ஒரு வனப்பகுதியையே உருவாக்கி இருக்கிறார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு துளசிச் செடியுடன் ஆரம்பிக்கப்பட்டது இன்று காய்கறிகள், மரங்கள், கீரைகள், பூக்கள், மூலிகைச் செடிகள், இருபதுக்கும் மேற்பட்ட பூச்செடிகள், நாற்பதுக்கும் மேற்பட்ட பழச்செடிகள், ராசி நட்சத்திர செடிகள் என பத்தாயிரம் வகைகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். தவிர வில்வம், ருத்ராட்சம், சந்தனம் போன்ற மரங்கள் உள்ளன. சந்தன மரங்களுக்குக் கீழே சிறிய பானைகளில் துளையிட்டு சிட்டுக் குருவிகளும், சிறிய வகை பறவையினங்களும் வாழ இடம் அமைத்துக்கொடுத்திருக்கிறார்.
தவிர வசம்பு, நில வாகை, சிரியா நங்கை, நேத்திர மூலி, ஆடாதொடை, பிரண்டை, திப்பிலி, வெட்டிவேர், சித்தரத்தை, கோபுரம் தாங்கி, பூனை மீசை, நொச்சி, கற்றாழை, சிவப்பு கற்றாழை, வல்லாரை, நேத்திரமூலி, நேத்ரா பூண்டு, சிவப்பு கேரட் ஆகிய மருத்துவ மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.
கடந்த 2014-ல் சென்னையின் சிறந்த வீட்டுத் தோட்டத்துக்கான தமிழக அரசின் விருதையும், மலேஷிய அரசின் ‘ஸ்வீட் துளசி விருதும் பெற்றிருக்கிறார். இவர் தோட்டங்களைப் பராமரிப்பதைப் பார்த்து, அப்போதைய சென்னை மாநகராட்சி மேயரான துரைசாமி ரிப்பன் பில்டிங்கில் தோட்டம் அமைக்க ஜஸ்வந்த்சிங்கை அழைத்திருக்கிறார்.
தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையின் பங்கு
மாடித்தோட்ட திட்டம் சென்னை உள்பட கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ரூ.500 மதிப்புடைய காய்கறி செட் வழங்கப்படும். இதில் மானியம் போக ரூ 300 செலுத்தினால் போதும். காய்கறி செட்டில் கிடைக்கக்கூடிய பொருள்கள் 2 கிலோ எடையுள்ள தேங்காய் நார்க்கழிவு கேக் பைகள் ஆறு, கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட பத்து வகையான காய்கறிகளின் விதைகள், அசோஸ்பைரில்லம் (200 கிராம்) (நுண்ணுயிர் உரம்), பாஸ்போ பாக்டீரியா (200 கிராம்) உரம், 100 கிராம் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மாவிரிடி உரங்கள், ஒரு கிலோ நீரில் கரையக்கூடிய உரங்கள், 100 மில்லி வேம்பு பூச்சிக்கொல்லி, தொழில்நுட்பக் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்று வழங்கப்படும்.
மேலும் வீட்டில் தோட்டம் அமைக்க விருப்பமுள்ளவர்கள். 10 ச.மீட்டர் பரப்பளவில் மாடியில் நிழல் வலைக்குடில் அமைக்க 50 சதவிகித மானியம் வழங்கப்படும். இதன்படி ரூ. 7,100 மதிப்புள்ள இந்த வகைக் குடில் ரூ. 3,550-க்கு கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற பொதுமக்கள் தங்களுடைய வீட்டின் சொத்து வரி நகல், வாடகைதாரர் ஒப்பந்த நகல், குடும்ப அட்டை, ஆதார், மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதவிர, ரூ. 20 மதிப்புள்ள 5 வகை காய்கறி விதைகள் அடங்கிய பை (மானியம் ரூ.8 போக) ரூ.12-க்கு கிடைக்கும். இதில் கத்தரி, புடலை, பாகல், தக்காளி, கீரை, பீர்க்கை, மிளகாய், கொத்தவரை ஆகிய வகைகளில் ஏதேனும் 5 விதைகள் அந்தப் பையில் இருக்கும். இவற்றையும் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
Read our other stories on roof top gardens:
மாடித்தோட்டம் மகிழ்ச்சியான அனுபவம்’ – சரோஜாவின் சந்தோஷம்!
– பெ. தனராஜ், படங்கள்: ஜி. நிர்மல் ராஜ்