சென்னை, செப்டம்பர் 5, 2018: சுந்தர் கெமிக்கல்ஸ் நிறுவனம் பல நுண்ணூட்டச்சத்து கொண்ட, ‘சுந்தர் ஹைப்ரோ நியூட்ரி ரைஸ்’ என்ற பெயர் கொண்ட செறிவூட்டப்பட்ட அரிசியைத் தயாரித்துள்ளது. இந்த அரிசி குறித்த விவாதம் சென்னை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் சுவாமிநாதன், முன்னாள் நிர்வாக இயக்குநர் டாக்டர் கேசவன், டாக்டர் பவானி, டாக்டர் அனில்குமார், அண்ணாபல்கலைக்கழகத்தின் உணவு தொழில்நுட்பத்துறையின் பேராசிரியர் டாக்டர் உஷா ஆண்டனி இவர்களுடன் சுந்தர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கே.ராமு கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் துவக்க உரையில் டாக்டர் அனில்குமார் கூறியதாவது,
செப்டம்பர் 1-7 வரை ஊட்டச்சத்துக்கான தேசிய வாரம் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும். உடல் நலத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. உடல் வளர்ச்சி அடையவும் உணவு தேவைப்படுகிறது. ஊட்டச்சத்து பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் இதில் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது, மற்றொன்று ஊட்டச்சத்து அதிகமாக இருப்பது. பொதுவாக ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன் காணப்படுகிறது. இந்தப் பற்றாக்குறையைப் போக்க அதிக அளவு தொகையும் இதற்காக செலவிடப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
சுந்தர் கெமிக்கல்ஸின் நிறுவனர் கே.ராமு தன் உரையில் கூறியதாவது,ஊட்டச்சத்துக் குறைப்பை ஒழிக்க நமது அன்றாட உணவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சேர்க்க வேண்டிய அவசியத்தை பேராசிரியர் சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார். அவருடைய வழிநடத்துதலின் காரணமாக இந்த அரிசியை தயாரித்துள்ளோம். இந்த அரிசி உலகிலேயே முதன்முறையாக பலவித நுண்ணூட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. செறிவூட்டப்பட்ட இந்த அரிசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம், இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகிய வேதிப்பொருள்கள் அடங்கியுள்ளன.
எங்கள் தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான அம்சம் லைசினுடன் அரிசியை தயாரிப்பது ஆகும். அதிக அளவில் புரோட்டீன் உருவாக்கும் அமினோ அமிலம் இதில் உள்ளது. இந்த அமிலம் புரதத்தின் தரம் மற்றும் அளவு அதிகரிப்பதற்கு முற்றிலும் அவசியமாகும். அதிலும் முக்கியமான ஊட்டச்சத்து இந்த அரிசியில் அதிக அளவு நிறைந்திருக்கிறது.
இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை தயாரித்தலில் எங்கள் செயல் முறை பரவலாக பல நூற்றாண்டுகளாக உள்ள பரம்பரை முறை(Parboiling) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.
பூச்சுதல் (COATING), நீட்டித்தல் (EXTRUSION), தூவல் (DUSTING), பாத் (PATH) ஒரு சர்வதேச நிறுவனம், இது நீட்டித்தல் முறைகளை ஊக்குவிக்கிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் உட்கருவுடன் இணைந்த முழுத்தானியம் (FRK- Fortified Rice Kernels) பல நுண்ணுயிரிகளை செறிவூட்டப்பட்ட அரிசிமாவைப் பிரித்தெடுத்து அரிசி வடிவில் தயாரிக்கிறது. சாதாரண அரிசியுடன் சேர்த்துதான் சமைக்க முடியும். ‘சுந்தர் ஹைப்ரோ நியூட்ரி ரைஸ்’ என்ற எங்கள் அரிசியை நேரடியாகச் சமைத்து உண்டால், மேலே கூறிய அனைத்து நுண்ணூட்டச் சத்துக்களையும் பெறமுடியும். இந்த செயல்முறையைப் பயன்படுத்தி அரிசி கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.1.60 முதல் ரூ. 1.80 வரை விலை இருக்கும். இந்த செறிவூட்டப்பட்ட அரிசி அனுமானிக்கப்பட்ட சோதனையில் தயாரிக்கப்பட்டுள்ளது, மேற்கொண்டு பல பரிசோதனைகளுக்குப் பிறகு இவை நாம் பயன்படுத்தக்கூடிய வகையில் வரக்கூடும்.
பேராசிரியர் சுவாமிநாதன் தன் உரையில் குறிப்பிட்டதாவது,மறைக்கப்பட்ட பசியை நம் சமுதாயத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். உணவு பாதுகாப்பு என்பது இனி ஊட்டச்சத்து பாதுகாப்பாக மாற வேண்டும். நம் நடைமுறை தேவைகளுக்கு அறிவியல் எவ்வாறு பயன்படுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. கே.ராமுவின் இந்த ஆராய்ச்சி தயாரிப்பு மறைக்கப்பட்ட பசியை சமாளிக்க ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும். மேலும் விஞ்ஞானிகளுக்கும் இது குறித்து ஆராய்ச்சி செய்ய இந்த செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளலாம். ஏற்கெனவே பொதுவிநியோக முறையில் அரிசி வழங்கப்படுவதால் அவற்றுடன் இதையும் ஒருங்கிணைத்து வழங்கலாம் இவ்வாறு குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் நிபுணர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் சுந்தர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கே.ராமு விளக்கமளித்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் அனில்குமார் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு அறிஞர்களும், விஞ்ஞானிகளும், ஆராய்ச்சி மாணவர்களும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத்துறை மாணவர்கள் என பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.