ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் குவால்காம் இணைந்து மீனவ நண்பன் செயலியை மேம்படுத்தி அமைத்திருக்கிறது. இது தற்போது ஆங்கிலம் மற்றும் எட்டு இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், பங்களா, குஜராத்தி, மராட்டி, ஓடியா, கன்னடா ஆகிய மொழிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதி மீனவர்களும் பயன்படுத்தும் வகையில் கூகுள் வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மீனவ நண்பன் செயலி ஏற்கனவே தமிழ்நாடு , புதுச்சேரி , ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 22000 மீனவர்கள் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது கடந்த அக்டோபர் 26, அன்று மேற்குவங்காளத்தில் அமைந்திருக்கும் திகா கடலோரப்பகுதியில் ‘மீனவ நண்பன் செயலி’ அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது.
கடல் அலையின் உயரம், காற்றின் திசை, வேகம், புயல், சுனாமி எச்சரிக்கை, மீன்கள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ள இடங்கள், என்று அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது மீனவ நண்பன் செயலி (எஃப்.எஃப்.எம்.ஏ. செயலி).
மீனவ நண்பன் மேற்கு வங்காள மாநில அறிமுக விழாவின் ஒரு பகுதியாக திகா பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்களுக்கு ‘மீனவ நண்பன் செயலி’ பதிவேற்றம் செய்த 10 ஆன்ட்ராய்டு மொபைல்கள் வழங்கப்பட்டன. அவர்கள் செயலியைப் பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை ஆர்.டி.இ.சி. தொண்டு நிறுவனத்தின் மூலம் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துவார்கள். மேலும் ஆன்ட்ராய்டு மொபைல் வைத்திருக்கும் அனைத்து மீனவர்களும் இந்தச் செயலியை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்ப பிரிவு இயக்குநர் நான்சி ஜே.அனபெல், மற்றும் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பூம்புகாரில் அமைந்திருக்கும் அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் பொறுப்பாளர் முனைவர் சி.வேல்விழி, ஆகியோர் கலந்துகொண்டு மீனவர்களுக்கு திட்டத்தின் நோக்கம் மற்றும் சிறப்பு அம்சங்களை விளக்கினர்.
மேலும் இந்த நிகழ்வில் மேற்கு வங்காள மத்திய மாநில அதிகாரிகளும், 100-க்கும் மேற்பட்ட மீனவ சங்கத்தினர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கொல்கத்தா ஆர்.டி.இ.சி தொண்டு நிறுவனம் திகா மீனவ சங்கத்துடன் இணைந்து சிறப்பாக முன்னெடுத்து செய்திருந்தது.
‘மீனவ நண்பன் செயலி’யின் முக்கிய நோக்கம், மீனவர்களுக்குத் தேவைசார்ந்த அடிப்படைத் தகவல்களை அளிப்பதும், ஆபத்தைக் குறைப்பதும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தி தன்னிறைவு அடையச்செய்வதுமாகும்.